search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா ஸ்கூட்டர்"

    தர்மபுரியில் 217 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் வரவேற்றார்.

    இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு உழைக்கும் பெண்கள் 217 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் அம்மா ஸ்கூட்டர்களை வழங்கினார். இதன் மதிப்பு ரூ.54 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி உழைக்கும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 2097 பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டர் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த வேலைக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 1002 பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இந்த திட்டத்தை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு திட்டத்திலாவது பயன்பெற்று வருகிறார்கள். தமிழகஅரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

    விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, பழனிசாமி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் கணேசன் நன்றி கூறினார். 
    அரசு மானியம் வராததால் அம்மா ஸ்கூட்டர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மானியம் கிடைக்காத பல பெண்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். #AmmaScooter
    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் அம்மா ஸ்கூட்டர் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின்கீழ் 18-ல் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஸ்கூட்டர் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் மற்ற பகுதிகளில் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கலெக்டர் அலுவலகங்களிலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பம் செய்தனர்.

    இந்த ஆண்டு ஒரு லட்சம் அம்மா ஸ்கூட்டர்கள் மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    எஞ்சியவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்னும் அரசிடம் இருந்து மானியம் கிடைக்காததால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னையில் மட்டும் 9,500 பேர் தேர்வு செய்யப்பட்டு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 6000 பேருக்கு மானியம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்னும் மானியம் கிடைக்காத பல பெண்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். #AmmaScooter

    ×